×

உக்ரைனில் அப்பாவி மக்கள் படுகொலை: ஐநா.வில் ரஷ்யா மீது போர் குற்ற தீர்மானம்? பல்வேறு நாடுகள் திட்டம்

புச்சா: உக்ரைனில் சித்ரவதை செய்தும், துப்பாக்கியால் சுட்டும் அப்பாவி மக்கள் கொலை செய்ததை கண்டித்து ரஷ்யா மீது ஐநாவில் போர் குற்ற தீர்மானம் கொண்டு வர பல நாடுகள் திட்டமிட்டுள்ளன. மேலும்,  பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்ற உள்ளார்.  நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 6 வாரங்களை கடந்து, தொடர்ந்து வருகிறது. ரஷ்யா படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. எதிர் தாக்குதலால், பல இடங்களில் ரஷ்ய படைகள் முன்னேற முடியாமல் பின்வாங்கி உள்ளன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பதாக அறிவித்து விட்டு, அன்றையே தினமே தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியது. தற்போது, ரஷ்ய படைகள்ல் பின்வாங்கிய பல இடங்களில் கொடூரமான போர் குற்றம் அரங்கேறி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புச்சா நகரில் மட்டும் 500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கை, கால்கள் கட்டுப்பட்டு சித்ரவதை செய்தும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர். பலர் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரஷ்ய படைகள் தங்கியிருந்த இடத்தின் அருகில் உள்ள பைன் காடுகளில் ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான நெஞ்சை உலுக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து, போர் குற்ற விசாரணைக்கு ரஷ்யாவை உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. மேலும், ரஷ்யாவின் போர் குற்றம் தொடர்பான ஆதரங்களை சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்களை அடையாளம் காண, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் உக்ரைன் இணைந்து செயல்படும்.

ஒவ்வொரு ரஷ்யனும் தங்கள் சக குடிமக்களில் யாரைக் கொன்றார்கள், அதற்கு கட்டளையிட்டது யார்? என்பது பற்றிய முழு உண்மையையும் கற்றுக் கொள்ளும் நேரம் வரும். ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயுதங்கள் கொடுங்கள். எங்களுக்குத் தேவையான விமானங்கள்,  டாங்கிகள், பீரங்கிகள், ஏவுகணை எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு  ஆயுதங்கள் பெற்றிருந்தால் ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றி இருக்கலாம்’ என்று தெரிவித்தார்.

உக்ரைனில் போர் தொடங்கிய பின்பு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்காக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் போர் குற்றம் தொடர்பான தீர்மானத்தை கொண்டு வர பல்வேறு நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே, மனித உரிமை மீறல் உள்ளிட்ட போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வழக்கு தொடர்ந்து உள்ளது. போர் தொடங்கிய பின் முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேச உள்ளது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Ukraine ,UN ,Russia , Massacre of innocent people in Ukraine: UN war crimes resolution against Russia? Different countries plan
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...