இந்திய பொருளாதாரம் இலங்கையைவிட மோசமாக உள்ளது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக உள்ளது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையைவிட மோசமாக உள்ளது.

எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடுவதற்கு பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து ஒன்றிய அரசு விவாதிக்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஏழு நாட்களுக்குப் பின்னர், எல்லாவற்றின் விலையையும் உயர்த்திவிட்டார்கள்.

இவர்களின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுகளுக்கு எதிராக சதி வேலைகளை செய்கின்றனர். அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் பாரபட்சமாக இருக்க வேண்டாம்’ என்று கூறினார். இதற்கிடையில், இலங்கையைப் போன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார நிலையை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

Related Stories: