×

மலைப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 4 முதல் 7ம் தேதி வரை மாநிலம் தழுவிய பிரசார இயக்கம்: முத்தரசன் பேட்டி

சத்தியமங்கலம்: வனப்பகுதி மற்றும் மலைப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பழங்குடியினர் மற்றும் வனம் சார்ந்து வாழ்வோரின் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ பி.எல். சுந்தரம் தலைமை வகித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.பெரியசாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ் வரன், மாவட்ட துனைச் செயலாளர் ஜி.வெங்கடாசலம் உள்பட வன மற்றும் மலை மாவட்டத்தில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்களும்,மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில்,பழங்குடியினர் மற்றும் வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முத்தரசன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் வனங்களை ஆக்கிரமிப்பது, வன விலங்குகள் வாழும் இடத்தை சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். புலிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. புலிகள் காப்பகம் என்ற பெயரில் வனத்தில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை, தெங்குமரஹாடா கிராமத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவது, வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை போன்ற நீதிமன்ற உத்தரவுகள் 2006ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமை சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் மாற்றம் ஏற்படவேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் ஏப்ரல் 25ம் தேதி வனத்துறை தொடர்பான மானிய கோரிக்கையில் இது குறித்து உரிய முடிவு எட்டப்பட வேண்டும் என்பது எங்களது கருத்தாக உள்ளது. அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். வனப்பகுதி மற்றும் மலைப் பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் மற்றும் மாவட்ட வன அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags : Mutarasan , Hillside, People, Demand, State, Embodied Propaganda, Mutharasan
× RELATED செவிலியர்கள் பணி நிரந்தரம் முத்தரசன் பாராட்டு