×

அதிமுக கூட்டுறவு சங்க தலைவரை கண்டித்து ரேஷன் பணியாளர் குடும்பத்துடன் விடிய விடிய உண்ணாவிரதம்: திருவாரூர் அருகே பரபரப்பு

திருவாரூர்: திருவாரூர் அடுத்த பவித்திரமாணிக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன்(45). பெரும்பண்ணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் 8 மாதத்துக்கு முன் நிதி முறைகேடு தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜமாணிக்கம், சங்க பணத்தை கையாடல் செய்ததாக குணசேகரன் அளித்த புகாரின்பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மேல்முறையீடு காரணமாக கூட்டுறவு சட்ட விதி எண் 153ன்படி குணசேகரனை பணியில் சேர்த்து கொள்ளுமாறு தலைவர் ராஜமாணிக்கத்துக்கு கடந்த ஜனவரி 10ம் தேதி மண்டல இணை பதிவாளர் சித்ரா பரிந்துரை கடிதம் வழங்கினார்.

ஆனால் குணசேகரன் பணியில் சேரக்கூடாது என்று சங்க தலைவரான அதிமுகவை சேர்ந்த ராஜமாணிக்கம் தொடர்ந்து 80 நாட்களுக்கும் மேலாக தடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தனக்கு பணி வழங்ககோரி பெரும்பண்ணையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன் மனைவி ஜெயந்தி மற்றும் மகன், மகள் உட்பட குடும்பத்தினருடன் நேற்று காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் குணசேகரன் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனக்கு பணி வழங்கினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக குணசேகரன் போராட்டத்தை தொடர்ந்தார். இதைதொடர்ந்து திருவாரூர் தாசில்தார் அன்பழகன் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.  விடிய விடிய நீடித்த போராட்டம் இன்றும் தொடர்ந்தது.

Tags : High Co-operative Association ,Tiruvarur , AIADMK co-operative, union leader, condemned, fasted
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது