×

திருப்போரூர் அருகே சேசிங்: போலீசார் விரட்டியபோது பைக் விபத்தில் திருடன் கால் முறிந்தது

திருப்போரூர்: திருப்போரூர் அருகே காயார் கிராமம் சந்திப்பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (49). இவர் கடந்த மார்ச் 20ம் தேதி வெங்கூர் பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது ஒருவர் லிப்ட் கேட்டதால் குமார் பைக்கை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில் அந்த நபர், குமாரிடம் இருந்து 6,500 ரூபாயை வழிப்பறி செய்து தப்பிவிட்டார். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்படி, திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர் கரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்போரூர் போலீஸ் எஸ்ஐ ராஜா தலைமையில், தனிப்படை போலீசார் முருகனை தேடி வந்தனர். இந்த நிலையில், கரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் முருகன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு கரும்பாக்கத்தில் உள்ள முருகன் வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து முருகன் பைக்கில் தப்பிச்சென்றார். இதையடுத்து போலீசாரும் பைக்கில் அவரை விரட்டிச் சென்றனர் இதனால் படுவேகமாக சென்ற முருகனின் பைக், சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் முருகனின் கால் உடைந்தது. பின்னாடியே விரட்டிச்சென்ற போலீசார், முருகனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். முருகன் மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள், மறைமலைநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளன.


Tags : Thiruporur , When chased by police, the thief broke his leg in a bike accident.
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...