விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ.4.50 லட்சம் கொள்ளை: ஊரப்பாக்கம் அருகே பரபரப்பு

கூடுவாஞ்சேரி: விவசாயியின் வீட்டு பூட்டை உடைத்து, அவர் தனது  மகன் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ.4.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஊரப்பாக்கம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்குபட்ட பெரிய அருங்கால் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாபு(71) விவசாயி. இவர் மனைவி கவுசல்யா(65), மகன் கண்ணன்(38), மகள்கள் உஷா(35), சரஸ்வதி(32) ஆகியோர் உள்ளனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாபு வழக்கம்போல் ஆடு, மாடுகளை நேற்று காலை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுவிட்டார். அவரது மனைவியும், மூத்த மகள் உஷாவும் 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்டபடி ஒரே பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பாபு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அப்போது மூத்த மகள் உஷா மற்றும் அவரது அம்மா கௌசல்யா ஆகிய இருவரும் 100 நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். இதனை கண்டதும் நகை மற்றும் பணத்துடன் மர்ம ஆசாமிகள் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.4.50 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாபு கூடுவாஞ்சேரி போலீசில் உடனே புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறுகையில், தனது மகன் கண்ணனுக்கு வருகிற ஜூன் மாதம் 17ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தமும் நடைபெற உள்ளது.  இதற்கு தேவையான பொருட்களை நாளை வாங்க இருந்தோம். அதற்குள் நகை மற்றும் பணம் கொள்ளை போய்விட்டதே என்றனர்.

Related Stories: