பேச்சிப்பாறையில் 45.8 மி.மீ பதிவு குமரியில் இடி மின்னலுடன் திடீர் மழை- சாலைகளில் ஆறாக ஓடிய வெள்ளம்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் இடி மின்னலுடன் திடீரென மழை பெய்த நிலையில் நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் ஆறுபோன்று மழை வெள்ளம் சாலையில் கரைபுரண்டு ஓடியது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. பகல் வேளையில் வெயில் கொளுத்துகிறது. கடும் வெப்பத்தின் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி போன்றவை விற்பனை செய்யப்படும் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மலையோர பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் பலத்த மழை இல்லை. பல இடங்களிலும் நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. அணைகளும் மூடப்பட்டு விட்டன.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகல் 1.30 மணி முதல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் வேளையில் இருள் சூழ்ந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் இடி, மின்னலுடன் மழை கொட்ட தொடங்கியது. தொடர்ந்து இது கனமழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் நாகர்கோவில் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

வடசேரியில் ஆராட்டு ரோடு உட்பட பல ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. நாகர்கோவில் அசம்பு ரோட்டில் ஆறு போன்று வெள்ளம் ஓடியது. கழிவுநீருடன் மழை வெள்ளமும் கலந்து சாலையில் பாய்ந்தோடியதால் சாலைகள் கழிவு பொருட்கள் கலந்து சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைக்காலங்களில் வடசேரி, அசம்பு ரோட்டில் மழை வெள்ளம் தேங்கி கரைபுரண்டு ஓடுவது வழக்கம். இதற்கு இதுவரை நிரந்த தீர்வு காணப்பட வில்லை.

இதனை போன்று குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 45.8 மி.மீ மழை பெய்திருந்தது. சிற்றார்-1ல் 16.6, கன்னிமாரில் 6.2, பெருஞ்சாணி 2.8, புத்தன் அணை 2.2, சிற்றார்-2ல் 11.2, ஆரல்வாய்மொழி 4, முக்கடல் அணை பகுதியில் 3.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

 மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 36.78 அடியாகும். அணைக்கு 391 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 18.45 அடியாகும். அணைக்கு 51 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 7.78 அடியாகவும், சிற்றார்-2ல் 7.90 அடியாகவும் நீர்மட்டம் காணப்படுகிறது. பொய்கையில் 20 அடியும், முக்கடல் அணையில் 14.5 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. அனைத்து அணைகளும் மூடப்பட்டுள்ளன. மாம்பழத்துறையாறு அணையில் தண்ணீர் இல்லை.

மாவட்டத்தில் நேற்று பகல் வேளையில் பெய்த மழை காரணமாக பிற்பகல் வெப்பத்தின் தாக்கம் குறைவாக காணப்பட்டது.  வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 7ம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதனால் குமரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் திடீர் மழை விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

வீட்டில் மரக்கிளை விழுந்து பெண் காயம்

குலசேகரம்: குலசேகரத்தை அடுத்து வெட்டிமுறிச்சான் பகுதியை சேர்ந்தவர் சுசீலா(58). 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவரது கணவர் இறந்து விட்டார். மகளுக்கு திருமணமாகி விட்டது. அந்த பகுதியில் உள்ள சானல் கரையோரம் வீட்டில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் மதியத்திற்கு மேல் பலத்தகாற்றுடன் மழை பெய்தது.

அப்போது சானல்கரையோரம் நின்ற அயனி மரத்தின் கிளை முறிந்து இவரது வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள் இருந்த சுசீலா பலத்த காயமடைந்தார். மகள், மருமகள் வெளியே நின்றதால் காயமின்றி தப்பினர். படுகாயமடைந்த சுசீலாவை குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: