ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரி கிராமத்தில் விதவையின் 3 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள்-நடவடிக்கை கோரி குறைதீர்வு கூட்டத்தில் மனு

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டது.இதில் பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் ஏழுமலை கடந்த 2018ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் எனது கணவர் பெயரில் இருந்த வீட்டுமனை பட்டா எனது பெயரில் வந்துவிட்டது.

இதனிடையே எனது பெயரில் உள்ள வீட்டுமனை பட்டாவை எனது உறவினர்கள் அபரிக்க முயற்சிக்கின்றனர். மேலும், எனது கணவர் சம்பாதித்த 3 ஏக்கர் நிலத்தையும் எங்கள் ஊரைச் சேர்ந்த சில நபர்கள் அபகரிக்க முயற்சிக்கின்றனர். எனவே, எனது சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களிடமிருந்து எனக்கு சொந்தமான சொத்துகளை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆற்காடு தாலுகா லாடாவரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த குறவர் சமுதாய மக்கள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது, தாங்கள் தயாரித்து வைத்திருந்த முத்து மணி மாலைகளை அதிகாரிகளுக்கு அணிவித்து கைகள் தட்டி ஆரவாரம் செய்தனர். அதனைத்தொடர்ந்து, மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  மேற்கண்ட முகவரியில் 95 குறவர் சமுதாய குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஊசி மணி மாலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த  ஆண்டுகளாக வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் மிகுந்த வறுமையான சூழலில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாரும் ஜாமின் வழங்க முன்வராத நிலையில், வங்கிக் கடனுதவி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஊசி, மணிகள் வாங்க கடனுதவி வழங்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.அதனைத்தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ₹2 லட்சம் மதிப்பிலான 2 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டதற்கான கடிதத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் வழங்கினார்.இந்த கூட்டத்தில் டிஆர்ஓ முஹம்மது அஸ்லம், சமூத பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: