×

7 சதவீத வீடுகளுக்கு மட்டுமே 100-150% சொத்துவரி உயர்வு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: தலைமை செயலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சொத்து வரியை 2018ம் ஆண்டு அதிமுக அரசு 50 சதவீதம் மற்றும் 100 சதவீதம் என்று உயர்த்தினார்கள். 2018ம் ஆண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், குடியிருப்பு அல்லாத இதர கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரி உயர்த்தினார்கள். தேர்தல் வந்த காரணத்தினால் அதை நிறுத்தி வைத்தார்கள். இப்போது அதை நாம் சீராய்வு செய்து நமது முதல்வர் ஏழைகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தால் தமிழகத்தில் உள்ள 83 சதவீத வீடுகளுக்கு 25 முதல் 50 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது.

77.87 லட்சம் வீடுகளில் வெறும் 25 சதவீத உயர்வு மட்டும் உள்ளது. 44.54 லட்சம் வீடுகளில் 50 சதவீதம் தான் உயர்வு இருக்கிறது. மீதம் உள்ள 19.23 லட்சம் வீடுகளில் தான் 100 சதவீத உயர்வு போடப்பட்டுள்ளது. 7 சதவீதம் வீடுகளுக்கு மட்டும் தான் 100ல் இருந்து 150 சதவீத உயர்வு உள்ளது. டவுன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு சொத்துவரி உயர்வு குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் அனைவருக்கும் 100 சதவீத வரி உயர்வு என்று இருந்தது. ஆனால், இப்போது 25ல் இருந்து 50 சதவீதம் எனவும், 50ல் இருந்து 100 சதவீதம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைக்கு அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு முந்தைய சொத்துவரி சீராய்வுகளின் போது கட்டிடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு உயர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நகர்ப்புறத்தில் 77,86,188 குடியிருப்புகள் உள்ளது. அதில் 44,53,976 குடியிருப்புகள் அதாவது 58.45 சதவீதம் குடியிருப்புகளுக்கு வெறும் 25 சதவீதம் மட்டுமே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், 19,23,393 குடியிருப்புகளுக்கு அதாவது 24.7 சதவீத குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 81.08 சதவீதம் மக்களுக்கு இந்த வரி என்பது பெரிதும் பாதிப்பாக இருக்காது. மொத்தம் உள்ள 77,87,188 குடியிருப்புகளில் 1,09,417 குடியிருப்புகளில் அதாவது 1.04 லட்சம் குடியிருப்புகளுக்கு மட்டுமே அதிகட்சமாக 150 சதவீத வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 11,03,210 குடியிருப்புகளில் 1,52,158 குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 3,46,832 குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், 3,12,894 குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்படும். சென்னை மாநகராட்சியில் 500 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 ஆகும். சீராய்வுக்கு பிறகு இது ரூ.1815 ஆக உயரும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்துவரி மிகவும் குறைவு ஆகும். முந்தைய அதிமுக ஆட்சியின் போது 300 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Tags : Minister ,KN Nehru , 7 per cent, for houses, 100-150% property tax, increase
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...