×

மானாமதுரையில் சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் வாகனங்கள்

மானாமதுரை : நாளை மறுநாள் மானாமதுரையில் சித்திரை திருவிழா துவங்க உள்ள நிலையில், திருவீதி உலாவிற்காக சுவாமி, அம்பாளை சுமக்கும் வாகனங்கள் புதுப்பொலிவு பெறுகின்றன.
மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா மதுரைக்கு அடுத்தாற்போல் மானாமதுரை வைகை ஆற்றில் தொடர்ந்து 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய அம்சமாக ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம் நடக்கும் அதேபோல வீரஅழகர்கோயிலில் நடக்கும் பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி போன்ற விழாக்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர்.

மேலும் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் சிறுவர்கள் கொண்டாடி மகிழ ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள், உள்ளிட்டவைகளும் அடங்கும். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக சித்திரைத் திருவிழா நடைபெறாமல் இருந்ததினால் பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற அரசு அனுமதி வழங்கியதையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வைகை ஆறு சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதேபோல கோயிலில் மராமத்து பணிகள் செய்வதுடன் சாமி, அம்பாள் மாலை வேளையில் திருவீதி உலா வருவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களாக குதிரை, அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மராமத்து செய்யப்படாத நிலையில் இந்த வாகனங்களை மண்டகப்படிதாரர்கள் மூலம் தற்போது அவற்றை பழுது நீக்கி வர்ணம் பூசும் பணி நடந்து முடிந்துள்ளது. நாளை மறுநாள் முதல் நாள் திருவிழா துவங்குவதால் கோயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Tags : Manamadurai , Manamadurai: As the Chithrai festival is about to start in Manamadurai tomorrow, vehicles carrying Swami and Ambala for the Tiruvedi walk
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...