×

சென்னை மாநகராட்சி 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற 9-ம் தேதி தாக்கல்: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற 9-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை வரிவிதிப்பு நிதிக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்கிறார். இதையடுத்து வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற உள்ளது.

இந்நிலையில் கூட்ட இறுதியில் 022 - 2023 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பின்னர் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டிய பொருள்கள் எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் கூறியுள்ளார். மேயராக பதவி ஏற்று நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டமாகும். சென்னை மாநகராட்சி மன்ற தலைவராக ராமலிங்கம், துணைத் தலைவர்களாக காமராஜ் மற்றும் ராஜகோபால், கொறடாவாக நாகராஜன், பொருளாளராக வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் தங்கள் பணிகளை அன்றைய கூட்டத்தில் தொடங்குகிறார்கள்.

புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டத்தை நடத்த கடந்த சில நாட்களாக ஆலோசிக்கப்பட்டது. புதிய நிதியாண்டில் மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகள், சிங்கார சென்னை திட்டம், மழைக்காலத்தில் சென்னை வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் அதில் இடம்பெற உள்ளன.


Tags : Chennai Municipality ,Mayor ,Priya , Chennai Corporation, Budget, 9th, Mayor Priya
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!