×

திரைப்படமான 65 வயது மாரத்தான் வீராங்கனையின் கதை!

நன்றி குங்குமம் தோழி

தன் கணவரின் சிகிச்சைக்காக வெறுங்காலில் மாரத்தான் ஓடிய 65 வயது பெண்ணின் வாழ்க்கை திரைப்படமானது. மகாராஷ்டிராவின் புல்தாமா மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றின் சிறிய வீட்டில் லதா கரேவும் அவரது கணவர் பகவான் கரேவும் வசித்து வருகின்றனர். இருவருமே விவசாயக் கூலிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உண்டு. அனைவருக்கும் திருமணத்தை முடித்து அவரவர் தனியாகிவிட, தங்கள் பிள்ளைகளை எதிர்பார்த்து நாங்கள் எப்போதும் வாழவில்லை என்கின்றனர் இந்த முதிய தம்பதிகள்.

உடல் நலம் சரியில்லாத தன் கணவரின் மேல் சிகிச்சைக்காக பணம் தேவைப்படவே தான் ஓடத் தொடங்கியதைக் குறிப்பிடும் லதா கரே, 2014ல் மகாராஷ்டிராவின் பாரமதியில் நடைபெற்ற 3 கி.மீ. மாரத்தானில் கலந்து கொண்டதை நினைவுகூர்கிறார். தான் ஓடிக்கொண்டிருந்தபோது தன்னுடைய காலணி அறுந்துவிட்டதாகவும், அதை கழட்டி எறிந்துவிட்டு வெறும் காலில் தான் தொடர்ந்து ஓடியதாகவும் சொல்கிறார் இவர். அப்போது அவர் மகாராஷ்டிரா மாநில பெண்களின் பாணியில் புடவை கட்டி ஓடி வந்ததாகவும், அவர் ஓடி வருவதைப் பார்த்த பல இளம் பெண்கள் லதாவைப் பார்த்து சிரித்ததாகவும் லதா கரே குறிப்பிடுகிறார்.

‘‘என் கணவருக்கு மிகவும் உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். அப்போது பணம் தேவைப்பட்டது. உடனே
எம்.ஆர்.ஐ. எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் சொன்னபோது என்னிடம் சுத்தமாகப் பணமில்லை. அப்போது மாரத்தான் ஓட்டப் பந்தயம் குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. நான் என் கிராமத்தில் எப்போதும நடந்து கொண்டே இருப்பதை என் பகுதி இளைஞர்கள் கவனித்ததால், நீங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டால் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என்றார்கள்.

பரிசுத்தொகை குறித்தும் எனக்குத் தெரிவித்தார்கள்.கொஞ்சமும் யோசிக்காமல் எனது கிராமத்திலே அதற்கான பயிற்சியை நான் ஓடி எடுக்கத் தொடங்கினேன். போட்டி நடந்த அன்று பலரும் என்னை கை தட்டி உற்சாகப்படுத்தினர்.  வெற்றிக் கோட்டை தொடும் அருகில் நான் இருப்பதை அப்போது உணர்ந்தேன். நம்பிக்கையோடு செய்ததில் வெற்றி மட்டுமல்ல பரிசுத் தொகையும் எனக்கே கிடைத்தது’’ என்கிறார் இவர். லதாவின் கணவர் பகவான் கரே பேசும்போது, ‘‘தன்னைப் பற்றி கொஞ்சமும் நினைக்காமல், எனது சிகிச்சைக்காக தன் மனைவி ஓடியதை தான் பெருமையாக உணர்வதாகக் குறிப்பிடுகிறார். எனக்காக இந்த வயதிலும் அவர் கஷ்டப்படவேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மிகவும் வருந்துவதாகவும்’’ அவர் தெரிவிக்கிறார்.

நவீன் குமார் எனும் இயக்குநர் லதா கரேயின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துள்ளார். ‘‘தன் கணவரின் உயிரைக் காப்பாற்ற 65 வயது நிறைந்த முதிர்ந்த பெண் கஷ்டப்பட்டதும், மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெறுங்காலில் ஓடி இலக்கை எட்டியதும் பத்திரிகை வழியாக என்னை ஈரக்கவே அவர் குறித்த செய்தியைப் ஆவணப்படுத்தவே முதலில் நான் விரும்பினேன். ஆனால் அது இப்போது திரைப்படமாகவே உருவாகிவிட்டது’’ என்கிறார் இவர். லதா கரே கதாபாத்திரத்தில் லதாவே நடித்துள்ளார். ‘‘பணம் சம்பாதிப்பதற்காகவே நான் ஓடத் தொடங்கினேன். ஆனால் திரைப்படத்தில் நான் நடிப்பேன், என் கதை படமாகும் என நான் கொஞ்சமும் நினைக்கவில்லை’’ என்கிறார் இவர்.முயற்சிக்கு வயது தடையில்லை.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags : marathon runner ,
× RELATED கஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்