சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 1 தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் அலுவலகத்துக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை கவர்னர், இதுவரை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பாமல் வைத்துள்ளார். ஏற்கனவே, மசோதாவில் சில விளக்கம் கேட்டு கவர்னர் திருப்பி அனுப்பினார். இதனால் 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை திருப்பி அனுப்ப சட்டத்தில் இடம் இல்லாததால், கவர்னர் மாளிகையில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
2 தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கும் அனுமதி தரவில்லை.
3 பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இருந்து 5 உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
4 தமிழக மீன் வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, 2020ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி, கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நேரத்தில் அதிமுக அரசு செயல்பட்டு வந்தது. ஆனாலும் தற்போது 27 மாதமாக கவர்னர் மாளிகையில் மசோதா கிடப்பில் போட்டுள்ளது தெரியவந்துள்ளது.
5 மாநில சட்ட கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று, சில சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 2020 ஜனவரி 13ம் தேதி கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவும் கடந்த 27 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
6 தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிப்பது குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, 2020 ஜனவரி 18ம் தேதி கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவும் 27 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
7 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் பொதுத் தமிழை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 2020 ஏப்ரல் 2ம் தேதி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த மசோதா கிடப்பில் பேடப்பட்டள்ளது.
8 கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர் குழுவை சஸ்பெண்ட் செய்யும்பட்சத்தில், உடனடியாக நிர்வாக அதிகாரி ஒருவரை பதிவாளர் நியமிக்கும் அதிகாரம் வழங்குவதற்கான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு 2020 செப்டம்பர் 24ம் தேதி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
9 அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு 2020 செப்டம்பர் 24ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேல் கவர்னரிடம் நிலுவையில் இருந்த இந்த மசோதாவை கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழக அரசு வாபஸ் பெற்றது.
10 அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்டம் 2020 செப்டம்பர் 24ம் தேதி கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேல் கவர்னரிடம் நிலுவையில் இருந்த இந்த மசோதாவை கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழக அரசு வாபஸ் பெற்றது.
11 சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் தேர்வு கமிட்டி தொடர்பான மசோதா தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இதற்கிடையே 2020 நவம்பர் 28ம் தேதி மசோதாவை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. இவ்வாறு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்கள், கவர்னர் மாளிகையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
