குன்னூரில் சினிமா சூட்டிங்கால் பரபரப்பு அந்தரத்தில் பறந்து வந்த காரால் தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி

குன்னூர்: குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் அந்தரத்தில் பறந்து வந்த காரை பார்த்து தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்தான் அது சினிமா சூட்டிங் எனத் தெரிந்து நிம்மதி அடைந்தனர். மலை மாவட்டமான நீலகிரி  மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா படப்பிடிப்பு களை கட்டியுள்ளது. தற்போது ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு  திரைப்படங்களின் சூட்டிங் நடந்து வருகிறது.

குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுனா நடிக்கும் தெலுங்கு படம் சூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் தூரம் அந்தரத்தில் பறந்து வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்தது.

இதைப் பார்த்த பக்கத்து தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பெரிய அளவிலான விபத்து நடந்து விட்டதோ என்ற அச்சம் அடைந்தனர். சிறிது நேரத்தில் சினிமா சூட்டிங்கிற்காக அந்த கார் அந்தரத்தில் பறக்க விடப்பட்டது தெரியவந்தது. சண்டைக் காட்சி ஒன்றின்போது கார் தறிகெட்டு ஓடி அந்தரத்தில் பறப்பதுபோல படமாக்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: