×

இரும்பு வேலியில் சிக்கி புள்ளிமான் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூண்டி காட்டில் இருந்து நேற்று புள்ளி மான் வெளியே வந்து சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த மான் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றது. அப்போது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரத்தில் அமைத்திருந்த இரும்பு வேலியில் இடித்துக்கொண்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அந்த புள்ளி மான் வலியால் துடித்துகொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தாலுகா போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் புள்ளி மானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மானை  கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக எடுத்து சென்றனர்.

புதிய குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி: திருவள்ளூர், ஏப்.5: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 கிராம ஊராட்சிகளில் கூரை வேயப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

எனவே குடிசை வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகள் தங்களது ஆதார் அட்டை எண் மற்றும் நிலம் தொடர்பான பட்டா மற்றும் இதர ஆவணங்களின் நகல்களை கணக்கெடுப்பு செய்ய வரும் அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர், தூய்மை பாரத இயக்க ஊக்குனர் ஆகியோரிடம் காண்பித்து பதிவுசெய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் சில்மிஷம்: திருவள்ளூர், ஏப்.5: பூந்தமல்லி அடுத்த சொக்காநல்லூர் சத்திரத்தை சேர்ந்தவர் லோகநாதன்(33). இவர் நேற்று முன்தினம் இரவு அதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்துள்ளார். அந்த வீட்டில் 26 வயதுள்ள ஒரு பெண்ணும், அவரது கணவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது லோகநாதன் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அலறியடித்துக்கொண்டு எழுந்துகொண்ட அந்த பெண் அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டார். இதனால் லோகநாதன் அங்கிருந்து தப்பி ஓடினார்.இதுகுறித்து அந்த பெண் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

ரூ.8 லட்சம் கஞ்சா சிக்கியது : திருத்தணி, ஏப்.5: ஆந்திராவிலிருந்து பாண்டிச்சேரிக்கு கடத்திய ₹8 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக பாண்டிச்சேரிக்கு கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 மூட்டைகளை தலையில் சுமந்தபடி இருவர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனையில் அவர்களிடம் 80 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு ₹8 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து இதுதொடர்பாக பாண்டிச்சேரியை சேர்ந்த அப்பன் (எ) பிரபு(26) மற்றும் சதீஷ்(31) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : pointman , Point deer trapped in the iron fence
× RELATED மாமல்லபுரத்தில் மர்மமான முறையில் இறந்த புள்ளிமான்