×

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் கரையை ஆக்கிரமித்து கட்டிய 165 வீடுகள் அகற்றம்: புளியந்தோப்பில் மறுகுடியமர்வு

அண்ணாநகர்: அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 165 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். சென்னையில் கடந்த 2015ம்  ஆண்டு ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக கூவம் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ள  நீர் புகுந்தது. ஆயிரக்கணக்கானோர் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து, கூவம்  கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அதிகாரிகள் அகற்றி, அங்கு வசித்தவர்களை மறு குடியமர்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம்  ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 439 வீடுகளை அகற்ற மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து, நோட்டீஸ் வழங்கினர். பின்னர், முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 93 வீடுகளை அகற்றி, அங்கு வசித்து வந்தவர்களை புளியந்தோப்பில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் மறு  குடியமர்வு செய்தனர். அடுத்தக்கட்டமாக மீதமுள்ள வீடுகள் இடிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, கடந்த 2ம் தேதி, ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு, மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

இந்நிலையில், அமைந்தகரை மண்டல மாநகராட்சி அதிகாரி முருகேசன், செயற்பொறியாளர் வைத்தியலிங்கம் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மேற்கண்ட பகுதிக்கு வந்து, 165 ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். பின்னர், அங்கு வசித்தவர்கள் மற்றும் அவர்களின் உடமைகளை லாரிகளில் ஏற்றி சென்று புளியந்தோப்பு கேபி.பார்க்கில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளை உணவு வழங்கப்பட்டது. மீதம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அடுத்தக்கட்டமாக அகற்றப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.

* சாலையோர கடைகள் இடிப்பு
திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டுக்குட்பட்ட அன்னை சிவகாமி நகரில் மழைநீர் கால்வாய் பணிக்காக, சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார், உதவி பொறியாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Koovam ,Arumbakkam Radhakrishnan ,Puliyanthope , Removal of 165 houses built on the banks of the Koovam in Arumbakkam Radhakrishnan town: Resettlement in Puliyanthope
× RELATED வேலைக்கு செல்லாததால் ஆத்திரம்...