×

தவறான தகவலை கொடுத்து குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் முன்னாள் மனைவி மீது நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் மனு: மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து, புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அப்போது, இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார்.

இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, அவரது முன்னாள் மனைவி புதிய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொய்யான தகவலை தெரிவித்து குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில் புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம். புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்தேன்.

அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளித்தார். குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில் அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் மோனிகா பெற்றுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Zonal Passport ,iCourt , Composer petitions court over new passport ex-wife for children giving false information: Zonal Passport Officer reply court order
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து