கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை முதியோர் நல மருத்துவமனையாக படிப்படியாக மாற்றப்படும்: மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை முதியோர் நல மருத்துவமனையாக படிப்படியாக மாற்றப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.127 கோடி மதிப்பில் ஒன்றியஅரசு நிதியின் கீழ், தேசிய முதியோர் நல மருத்துவமனைக்கான கட்டிடம் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதற்குள் உலகம் முழுதும் கொரோனா தொற்று 2020ல் பரவ துவங்கியது. தமிழகத்திலும் தாக்கம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கிண்டி கிங் வளாகத்தில் கட்டப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவமனை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அங்கு ஆக்சிஜன் வசதியுடன் 750 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மேலும் கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு சிகிச்சை அளிப்பதற்கான மையமும் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 10க்கு கீழ் வந்த நிலையில் தமிழகத்திலும் குறைந்து உயிரிழப்பு இல்லாத மாநிலமாக உள்ளது. இதனால் கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் வருவதில்லை. அங்கு பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் வழக்கம்போல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது 2 டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே அவ்வப்போது வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காத்திருக்கின்றனர். எனவே இந்த மருத்துவமனையை முதியோருக்கான பல்வேறு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. எனினும் நான்காம் அலை கொரோனா பாதிப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்பதை உறுதியாக கூற முடியாது. எனவே கிண்டி கொரோனா மருத்துவமனை, முதியோர் நல மருத்துவமனையாக படிப்படியாக மாற்றப்படும். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படும்’’ என்றனர்.

Related Stories: