×

தமிழகத்தில் 3 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

புதுடெல்லி: ‘மாநில அரசு கொடுத்துள்ள மூன்று மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும். இது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்க 197 விதியின் கீழ் அதிகாரம் உள்ளது. இந்த விதியைப் பயன்படுத்தி, மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டுமென கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை நேற்று தாக்கல் செய்தார்.

அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அகில இந்திய மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கே அவர் அனுப்பி இருந்தார். சமீபத்தில் நடந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அதிலும் மீண்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், ‘நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு ஆளுநரிடம் வழங்கிய மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை எனவும், உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றால் தான் அவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்’ என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. அதனால் மாநில அரசு கொண்டு வந்துள்ள நீட் உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் வைத்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மேலும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியவுடன் திமுக எம்பிக்கள் அனைவரும், தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரியும், இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினர். ஆனால் இப்போதைக்கு அந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமாக கூறியதால் திமுக எம்பிக்கள் உடனடியாக வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Governor ,Tamil Nadu ,Parliament , Governor who did not take action on 3 bills in Tamil Nadu should be withdrawn: DMK attention resolution in Parliament
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்