ஓட்டலில் மதுபோதையில் குத்தாட்டம்: சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களின் மகன், மகள் உள்பட 157 பேர் கைது

திருமலை: ஐதராபாத் ஓட்டல் பார்ட்டியில் போதையில் குத்தாட்டம் போட்ட பிரபல சினிமா நடிகர்-நடிகைகள், தொழிலதிபர்களின் மகன், மகள்கள் உள்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வாரத்தின் கடைசி நாளன்று இரவு பார்ட்டி நடப்பது வழக்கமாம். அப்போது பிரபலமானவர்கள் மற்றும் சினிமா நடிகர்களின் மகன், மகள்கள் அங்கு திரள்வதும் அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு விடிய விடிய குத்தாட்டம் போடுவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஒரு பார்ட்டி நடப்பதாகவும், அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்திவிட்டு குத்தாட்டம் போடுவதாகவும் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிலர் தாங்கள் வைத்திருந்த போதை பொருட்களை வெளியே வீசிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில், போதை பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அங்கிருந்த 99 வாலிபர்கள், 39 இளம்பெண்கள் மற்றும் 19 பப் ஊழியர்கள் என 157 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பிரபல சினிமா நடிகர்-நடிகைகள் மற்றும் அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்களின் மகன்கள், மகள்கள் என தெரியவந்தது. இவர்களில் பிக்பாஸ் வின்னர் ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பி மகள் (நடிகர் நாகபாபுவின் மகள்) நிஹாரிகாவும் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். சுமார் 10 மணி விசாரணைக்கு பிறகு நிஹாரிகா, பிக்பாஸ் புகழ் நெபுலா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோரை நோட்டீஸ் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மற்றவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பார்ட்டியில் கொகைன், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள், எல்எஸ்டி அடங்கிய சிகரெட்டுகள் பயன்படுத்தியதும், இந்த ஓட்டல் உரிமம் முன்னாள் எம்பி ஒருவரது மகள் பெயரில் உள்ளதும், கடந்த ஜனவரியில் வேறு ஒருவருக்கு குத்தகைக்குவிட்டதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 157 பேரில் 45 பேர் போதை பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்றும்,மற்றவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினார்களா என்ற சந்தேகம் உள்ளது.

 

எனவே 24 மணி நேரத்திற்குள் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும். இந்த பரிசோனையின் முடிவில் மற்ற விவரங்கள் தெரியவரும். போதை பொருள் வழக்கில் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நடிகர் நாகபாபு, வீடியோ மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை பார்ட்டி நடந்த இடத்தில் எனது மகள் நிஹாரிகா இருந்துள்ளார். ஆனால் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை. இதை போலீசாரும் தெரிவித்துள்ளனர். எனவே இதை யாரும் விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்

Related Stories: