×

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 18.3.2022 அன்றும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கை 19.3.2022 அன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 6.4.2022 அன்று முதல் 10.5.2022 வரை நடைபெறவுள்ளது.

அதனையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த நிதியாண்டில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட  திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும்  ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இந்த நிதியாண்டின் மானியக் கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்  பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு.

நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பி. அமுதா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,MK Stalin ,Chennai General Secretariat , Chief Minister MK Stalin's study on the activities of various departments in the Chennai General Secretariat!
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...