நடப்பு சாம்பியன் சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி; கடினமாக உழைத்து வலிமையுடன் திரும்புவோம்: கேப்டன் ஜடேஜா நம்பிக்கை

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 11வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 4, தவான் 33, ராஜபக்சே 9 ரன்னில் வெளியேற லியாம் லிவிங்ஸ்டன் 32 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 60 ரன் அடித்தார். ஜிதேஷ் சர்மா 26 ரன் எடுத்தார். சென்னை பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 181 ரன் இலக்கை துரத்திய சென்னை அணியில் கெய்க்வாட் 1,  மொயின் அலி 0 என வெளியேறினர். ராபின் உத்தப்பா 13, ராயுடு 13, ஜடேஜா 9, டோனி 23 , பிராவோ 0, பிரிட்டோரியஸ் 8 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக ஷிவம் துபே 30 பந்தில் 57ரன் எடுத்தார். 18 ஓவரில் 126 ரன்னுக்கு சென்னை ஆல்அவுட் ஆனது. 54 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. பஞ்சாப் பந்து வீச்சில் ராகுல் சாகர் 3, வைபவ் அரோரா, லிவிங்ஸ்டன் தலா 2விக்கெட் வீழ்த்தினர். 3வது போட்டியில் பஞ்சாப்பிற்கு இது 2வது வெற்றியாகும். சென்னை ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. 60 ரன் அடித்ததுடன் 2 விக்கெட் வீ்ழ்த்திய லிவிங்ஸ்டன் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் கூறுகையில், நாங்கள் 5-7 ரன் குறைவாக இருந்தோம் என்று நினைத்தோம், ஆனால் 180 ரன்னை துரத்துவது எளிதானது அல்ல. புதிய பந்தில் நாங்கள் பந்து வீசிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. லிவிங்ஸ்டனிடம் நான் எதுவும் சொல்லவில்லை. அவர் பேட்டிங் செய்யும் போது நாங்கள் ரிலாக்சாக மூச்சு  விடுகிறோம். அவர் அடிக்கும் சில ஷாட்டுகள் பிரமாதம். வைபவ்வின் திறமையைப் பார்த்தோம். அவர் வித்தியாசமானவர் என்பதால் நாங்கள் அவரை விரும்பினோம். கும்ப்ளே மும்பை அணியில் இருந்தபோது ஜிதேஷ்சர்மா திறமையை பார்த்தார்.அவர் ஒரு அற்புதமான கீப்பர். அவரைப் பற்றிய தனிச்சிறப்பு அவருடைய அணுகுமுறை. நாங்கள் நிச்சயமாக கடினமான, பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாடுவோம், என்றார்.

சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறுகையில், பவர்பிளேவில் நாங்கள் அதிக விக்கெட் இழந்தோம். வலுவாக மீண்டு வருவதற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும். கெய்க்வாட்டிற்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் நன்றாக வருவார் என்று நம்புகிறேன். துபே நன்றாக பேட்டிங் செய்கிறார். அவரை நல்ல மனநிலையில் வைத்திருப்பது முக்கியம். கடினமாக உழைத்து வலிமையுடன் மீண்டு வர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்.

Related Stories: