×

எல்லை மீறும் லோன் ஆப் - போலீசில் குவியும் புகார்

ஈரோடு: ஈரோட்டில் லோன் ஆப் மூலம் இளைஞர் பெற்ற ரூ.2,000 பெற்ற கடனுக்காக ஒருநாள் தாமதமானதால் அவரின் செல்போனில் உள்ள எண்களுக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி லோன் நிறுவனம் அடாவடியில் ஈடுபட்டுள்ளது. லோன் ஆப் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். ஈரோடு பிராமண பெரிய அக்ரகாரத்தை சேர்ந்த அன்சர்தீன் சாலை ஓரத்தில் மாலை நேர சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். தனது அவசர தேவைக்காக கடந்த வாரம் Loan bro என்ற ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற விண்ணப்பித்து ஆதார், பான் நகல்களை சமர்ப்பித்து 2,277 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்.

ஒரு வார காலத்தில் வட்டியுடன் சேர்த்து 3,796 ரூ செலுத்த வேண்டும் என அப்போது அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 7 நாட்களில் தொகையை செலுத்த முடியாததால் அன்சர்தீன் கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த லோன் ஆப் நிறுவனம் உடனடியாக 4,219 ரூபாய் செலுத்துமாறு கூறியிருக்கிறது. பணத்தை செலுத்தாததால் அன்சர் செல்போன் பதிவில் இருந்த அனைத்து எண்களுக்கும் அன்சர் புகைப்படத்தையும், நான் சிக்கலில் இருக்கிறேன் என குறுஞ்செய்தியையும் அனுப்பி உள்ளனர். அதிர்ச்சியடைந்த அன்சர் தனது குடும்பத்தினருடன் Loan bro  நிறுவனம் மீது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

போலீசில் புகார் அளித்தால் மேலும் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று லோன் ஆப் நபர்கள் மிரட்டுவதாகவும், தற்கொலை செய்யும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் ஆன்லைன் கடன் ஆப் நிறுவனங்களின் தொல்லை அதிகரிப்பதாகவும், அதை  முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத லோன் ஆப் புகார்கள் குவிந்து வரும் நிலையில் அதனை பயன்படுத்தி கடன்கள் வாங்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். எளிதாக, உடனடியாக கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்கினால் இது போன்ற பெரும் ஆபத்தில் சிக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.


Tags : Boundary Loan App - Accumulate complaint to the police
× RELATED தலைமை காவலர் பணியிடை நீக்கம்