×

மலைப்பகுதியில் மழை இல்லாததால் பிஏபி அணைகளின் நீர்மட்டம் சரிகிறது-விவசாயிகள் வேதனை

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாததால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட  அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை  அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தில்(பிஏபி) சோலையார்,  பரம்பிக்குளம்,ஆழியார்,திருமூர்த்தி ஆகிய அணைகள் முக்கியமானவையாகும்.

இதில், சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணை வழியாக சர்க்கார்பதி  மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு மின்  உற்பத்திக்கு பிறகு தண்ணீர் வெளியேற்றப்பட்டு கான்டூர் கால்வாய் வழியாக,  ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில்,  பொள்ளாச்சியை அடுத்த 120அடி மொத்த கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு கான்டூர் கால்வாய்  மட்டுமின்றி சின்னாறு, அப்பர் ஆழியார்,குரங்கு அருவி ஆகியவற்றில்  இருந்தும் தண்ணீர் வருகிறது.

ஆழியார் அணையில் இருந்து, புதிய மற்றும் பழைய  ஆயக்கட்டு பாசன பகுதிக்கு மட்டுமின்றி, வழியோர கிராமங்களின் குடிநீர்  தேவைக்காகவும். பாசனத்திற்காக கேரள மாநில பகுதிக்கும் என ஆண்டுதோறும் குறிப்பிட்ட  டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுகிறது.கடந்த ஆண்டில், ஜூன் முதல் பல  மாதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்திருந்தது. இதனால் பல மாதங்களாக தண்ணீர் திறப்பு தொடர்ந்து  அதிகமானது.

அதன்பின், டிசம்பர் மாதத்தில் ஓரிரு நாட்களுக்கு பிறகு மிகவும்  குறைந்தது. இந்த ஆண்டில், ஜனவரி முதல் மழையில்லாததால், நீர்மட்டம் சரிய  துவங்கியது. அதிலும், கடந்த இரண்டு மாதமாக மழையின்றி வெயிலின் தாக்கம்  அதிகரிப்பால்,ஆழியார் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது. தற்போது  வினாடிக்கு 200 முதல் 250 கனஅடி வரையே நீர்வரத்து உள்ளது. இதனால்,  கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை 110 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்றைய  நிலவரப்படி 71 அடியாக சரிந்துள்ளது.

அதுபோல், மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதியில் மழை இல்லாததால், மொத்தம் 72அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளது. மழைப்பொழிவு இல்லாததால், நேற்றைய  நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு வெறும் 70 கன அடி தண்ணீர்  வரத்து இருந்தது. இருப்பினும் வினாடிக்கு 1100கன அடிவீதம் காண்டூர்  கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது.

கடந்த மார்ச் துவக்கத்தில் 65 அடியாக இருந்த பரம்பிக்குளம் அணையின்  நீர்மட்டம், தற்போது 57அடியாக சரிந்துள்ளது. அதுபோல்,  மொத்தம் 160 அடி கொள்ளளவு கொண்ட  சோலையார் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 25 கனஅடியாக குறைந்தது.  நீர்மட்டம் தற்போது, 23 அடியாக சரிந்துள்ளது. மழையின்றி பிஏபி அணைகளுக்கு  தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags : BAP , Anaimalai: Due to lack of rain in the Western Ghats next to Pollachi, the water level of the dams under the BAP project has dropped.
× RELATED பிஏபி கால்வாய் கரையோரம் சட்ட விரோத...