திருப்பதி சுவிம்ஸ் மற்றும் டாடா புற்றுநோய் மருத்துவமனையை ராயலசீமா பிராந்திய புற்றுநோய் மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்-ஆய்வு செய்த செயலதிகாரி தகவல்

திருமலை : திருப்பதி சுவிம்ஸ் மற்றும் டாடா புற்றுநோய் மருத்துவமனையை பிராந்திய புற்றுநோய் மருத்துவமனையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செயலதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் செயலதிகாரி ஜவஹர் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:கடந்த மாதம் பிரபல புற்று நோயியல் நிபுணர் தத்தாத்ரேயா நோரி, டாடா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் சுவிம்ஸ் புற்றுநோய் மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, புற்றுநோயை ஒழிக்கவும், சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மேற்கொள்ள வேண்டியை நடவடிக்கைகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி விளக்கம் அளித்தார்.அதன் ஒருகட்டமாக 2 மருத்துவமனைகளிலும் மீண்டும் ஆய்வு செய்தேன். ஏழுமலையானின் அருளால் டாடா புற்றுநோய் மருத்துவமனையை மே முதல் வாரத்தில்  திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  புற்றுநோயியல் துறைக்கு உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தேவை என்று தெரிகிறது.

அவற்றை வழங்குவதாக சுவிம்ஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சுவிம்ஸ் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் டாடா புற்றுநோய் மருத்துவமனையை ராயலசீமா பிராந்திய மருத்துவமனையாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, இணை செயலதிகாரிகள் சதா பார்கவி, வீரபிரம்மன், சுவிம்ஸ் இயக்குனர் டாக்டர் வெங்கம்பா, எஸ்டேட் அதிகாரி மல்லிகார்ஜூனா, டாடா புற்றுநோய் மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் பி.ஆர்.ரமணன், டாக்டர் நாகேஷ்வர், தேவஸ்தான தலைமை பொறியாளர்  நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: