×

திருப்பத்தூர் அருகே வேன் விபத்தில் பலியான 11 பெண் சடலங்கள் நள்ளிரவு ஒரே இடத்தில் நல்லடக்கம்-கிராம மக்கள் விடிய, விடிய கதறல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே மலைக்குன்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான 11 பேரின் சடலம் நள்ளிரவு ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சடலங்களை பார்த்து கிராம மக்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 40 பேர், நேற்று முன்தினம் தெலுங்கு வருட பிறப்பையொட்டி சேம்பரை என்ற குன்று பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சரக்கு வேனில் சென்றனர். மிக குறுகலான வளைவில் சென்று கொண்டிருந்த சரக்கு வேன், திடீரென நிலை தடுமாறியது. இதை கட்டுப்படுத்த டிரைவர் முயன்றும் முடியாத நிலையில், பின்னோக்கி சென்று பக்கவாட்டில் உள்ள 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் உட்பட 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை, திருப்பத்தூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 6 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும், 24 பேரில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வேனில் பயணம் செய்து லேசான காயத்துடன் தப்பிய பெண்கள் கூறியதாவது:ஆண்டுதோறும் உகாதி பண்டிகையொட்டி சேம்பர் குன்றின் மீதுள்ள சுயம்பு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வருவோம். இக்கோயிலை 32 கிராம மக்களும் சேர்ந்து கட்டி வருகிறோம். கோயில் கட்டுமான பணிக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்காக, தற்காலிக மண் சாலை அமைத்திருந்தோம். வழக்கமாக குன்றின் அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, கோயிலுக்கு நடந்து செல்வது வழக்கம்.

இதேபோன்று கோயிலுக்கு நேற்று முன்தினம் வந்த பலரும் அடிவாரத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தனர். ஆனால் நாங்கள் சென்ற வாகனம் மட்டும் குன்றின் மீது ஏறியது. பாதி தூரம் கடந்தபோது அதிக பாரம் தாங்காமல் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்தது. இதனால் நாங்கள் கதறினோம். அதற்குள் வேன், பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் 2 முறை பல்டி அடித்து அங்கிருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. எங்கள் கண்முன்னால் எங்கள் கிராமத்தை சேர்ந்த 5 பேர் துடிதுடித்து இறந்தனர். பலர் உயிருக்கு போராடினோம்.

எங்களை மீட்க யாரும் உடனடியாக வர முடியாததால் கதறி அழுதோம். சிறிதுநேரம் கழித்த பின்னரே கோயிலுக்கு வந்தவர்கள் பள்ளத்தில் இறங்கி எங்களை மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்தவர்களை ஆம்புலன்சில் மீட்க செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் சிலர் சிக்னல் பகுதியை தேடிச்சென்று ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதற்குள் டூவீலர்களில் காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்தனர்.இந்நிலையில், உயிரிழந்த 11 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது சடலங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவே ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சடலங்களை பார்த்த கிராம மக்கள் விடிய விடிய கதறி அழுதது பெரும் சோகத்ைத ஏற்படுத்தியது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ₹50 ஆயிரமும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் நேற்று காலை புலியூர் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர்.

விபத்துக்குள்ளான வேன் தீ வைத்து எரிப்பு

திருப்பத்தூர் அருகே மலைக்குன்று வளைவில் நேற்று முன்தினம் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளான சரக்கு வேன் மீட்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 11 பேர் பலியாக காரணமாக இருந்த அந்த வேனுக்கு நேற்று காலை யாரோ மர்ம ஆசாமிகள் தீ வைத்துள்ளனர். இதில், வேன் முழுமையாக எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த வேனை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான வேன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tirupathur , Tirupati: The bodies of 11 people who were killed when a van overturned on a hill near Tirupati were cremated at the same place at midnight.
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...