×

ஐதராபாத்தில் இருந்து திருத்தணிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்-அரக்கோணம் ரயில்வே போலீசார் அதிரடி

அரக்கோணம் : ஐதராபாத்தில் இருந்து நேற்று அதிகாலை திருத்தணி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சாவை அரக்கோணம் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்தும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டும் வருவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே கஞ்சா கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க ‘ஆபரேஷன் 2.0’ என்ற திட்டத்தை செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். கஞ்சா பறிமுதல் வழக்குகளில் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மற்றும் பஸ்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பது தெரியவந்தது.

இந்நிலையில், ரயில்வே எஸ்பி இளங்கோ உத்தரவின்பேரில் டிஎஸ்பி முத்துக்குமார் மேற்பார்வையில் அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், போலீஸ்காரர்கள் கிருஷ்ணகுமார், அரவிந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை திருத்தணி, அரக்கோணம் வழியாக ஆந்திராவில் இருந்து வரும் ரயில்களில் சோதனை நடத்தினர்.

அப்போது அதிகாலை 5 மணியளவில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து நின்ற காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர். பொதுப்பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த 2 பைகளை ஆய்வு செய்ததில், பொட்டலங்களாக மொத்தம் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அவற்றின் மதிப்பு ₹5 லட்சம் எனக்கூறப்படுகிறது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும் வழக்குப்பதிந்து கஞ்சா கடத்தி வந்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கஞ்சா எந்த ரயில் நிலையத்தில் இருந்து எங்கு கடத்தப்படுகிறது என பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Arakkonam Railway Police ,Hyderabad ,Thiruvananthapuram , Arakkonam: Arakkonam seized 14 kg of cannabis smuggled on an express train from Hyderabad to Thiruvananthapuram yesterday morning.
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!