×

நாங்குநேரி அருகே ஒரே இடத்தில் 60க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு-அகழாய்வு நடத்த தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நாங்குநேரி :  நாங்குநேரி அருகே ஒரே இடத்தில் 60க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள வாகைக்குளம் பெரும்படையார் சாஸ்தா கோவில் அருகிலுள்ள சாஸ்தா பொத்தை அடிவாரத்தில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பழந்தமிழரின் பண்பாடுகளை அறிய மாநில தொல்லியல் துறை கள ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் ஓடும் நம்பி ஆற்றுப்படுகையில் உள்ள துலுக்கர்பட்டியில் தொல்லியல் துறை கள அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு பழங்கால மண்பானை ஓடுகள், பாசிமணிகள், எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கண்டெடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் நம்பி ஆற்றங்கரையில் வாகைகுளம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பெரும்படையார் சாஸ்தா கோயிலின் வடக்குப் பகுதியில் ஏராளமான மிக தொன்மையான முதுமக்கள் தாழிகள் இருப்பதாக அப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் தெரிவித்தனர். அங்கு மலை அடிவாரத்திலிருந்து சாலை, ரயில்வே, உள்ளூர் பயன்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரள்மண் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பூமிக்கடியில் இருந்து வெளிப்பட்ட முதுமக்கள் தாழி சேதமடைந்து காணப்படுகின்றன.

இதையடுத்து மழையால் ஏற்பட்ட மண் அரிப்புகளால் பூமிக்கடியில் இருக்கும் முதுமக்கள் தாழிகள் தற்போது வெளியில் தெரிகின்றன. அதில் சில தாழிகள் ஜோடியாகவும் சில தனியாகவும் உள்ளன. அடுத்தடுத்து ஒரேஇடத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி தரைக்கு மேல் சாதாரணமாகத் தெரிகின்றன. வழக்கமாக முதுமக்கள் தாழிகள் தடித்த சுடுமண் ஓடுகளுடன் இருக்கும். ஆனால் இங்கு சுமார் 2 மிமீ அளவிலான மெல்லிய சுடுமண் ஓடுகளால் ஆன தாழிகள் காணப்படுகிறது.

மேலும் அதனை ஒட்டிய பகுதியில் சுடுமண் தளமும் உள்ளது. இது பழங்கால தமிழர்கள் குடியிருப்பு தளப்பகுதியில் பயன்படுத்திய ஒரு தொன்மையான தொழில்நுட்பம் என தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு சான்றாக இந்த சுடுமண் தளங்கள் சீராகவும், கடினமாகவும் செங்கல் தளங்களைப் போல காணப்படுகிறது. இத்தகைய பழமையான அரிய தொல்லியல் புதையல்கள் ஒரே பகுதியில் இருப்பது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இவற்றை தமிழக அரசு முறைப்படுத்திக் கள ஆய்வு செய்து இப்பகுதியில் கிடைக்கும் தரவுகள் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டு தகவல்களை வெளிக்கொணர முடியும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கருத்தாகும்.

முதற்கட்டமாக இப்பகுதியை தொல்லியல் துறை கையகப்படுத்தி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பழந்தமிழர் அடையாளங்களை அழிவிலிருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து பார்வையிட செய்ய வேண்டும். இப்பொத்தையை சுற்றிலும் இதுபோல ஏராளமான பழந்தமிழர் சான்றுகளாக கோயில்கள் மண்டபங்கள் காணக் கிடைக்கின்றன.

எனவே நாங்குநேரி தாலுகாவில் மீதமுள்ள நம்பியாறு, பச்சையாற்றுப் படுகையில் காணப்படும் பாண்டியர் கால கோயில்கள், களக்காடு சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள கோட்டைக்கரைச் சுவர் சத்தியவாகீஸ்வரர் கோயிலுள்ள பாதாள அறை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள குகைகள், சிங்கிகுளம் சமணமலை கோயிலில் உள்ள தொல்லியல் எச்சங்கள் என பழந்தமிழர் வாழ்வியல் சான்றுகள் நிறைந்து கிடக்கும் இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு பழந்தமிழர் பண்பாட்டுகளை வரலாற்றுப் பதிவுகளாக ஆக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

Tags : Nanguneri , Nanguneri: More than 60 elderly minions have been found in one place near Nanguneri. Nellai District
× RELATED தமிழக அரசு பேருந்துகளில் காவலர்கள்...