×

பூக்கடை பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: தண்ணீர் பந்தல் அமைத்துக் கொண்டிருந்தபோது விபரீதம்; பைக்கில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை

சென்னை: சென்னை பூக்கடை பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைத்துக்கொண்டிருந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, பைக்கில் தப்பிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். சென்னை, தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (59). இவர், பூக்கடை பேருந்து நிலையத்தில் ஜூஸ் மற்றும் பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2 மகள்கள் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.

ஒரு மகள் பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் பூக்கடை பகுதி அதிமுக வட்ட செயலாளராக இருந்த சவுந்தரராஜன், கடந்த சில மாதங்களுக்கு முன், திமுகவில் இணைந்தார். இந்நிலையில், நேற்று காலை பூக்கடை பேருந்து நிலையத்தில், திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற இருந்தது. இதற்கான பணியில், சவுந்தரராஜன் மற்றும் திமுகவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென சவுந்தரராஜனை வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆனால், அதற்குள் மர்ம நபர்கள், சவுந்தரராஜனை சுற்றிவளைத்து தலையை குறிவைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, கை, கால்கள் உள்பட 11 இடங்களில் வெட்டு விழுந்ததில் சவுந்தரராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சவுந்தரராஜனை திமுகவினர் மற்றும் அப்பகுதியினர் மீட்டு உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த எஸ்பிளனேடு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கொலையான சவுந்தரராஜன் அதிமுகவில் இருந்தபோது, வியாசர்பாடியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் காட்டான் கணேசன், வீரபத்திரன் ஆகியோரின் நட்பு வட்டத்தில் இருந்துள்ளார். மூவரும் இணைந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சவுந்தரராஜன் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். கடந்த வாரம் பூக்கடை பேருந்து நிலைய பகுதியில், சவுந்தரராஜன் கட்சி சுவர் விளம்பரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டான் கணேசன் மற்றும் வீரபத்திரன் உள்ளிட்ட அதிமுகவினர், அந்த சுவரில் தங்கள் கட்சி விளம்பரம் செய்ய உள்ளதாக கூறினர்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இருதரப்பினரும் எஸ்பிளனேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், உயர் நீதிமன்ற காவல் உதவி ஆணையர் மாரியப்பன் விசாரணை நடத்தி, இருதரப்பினரிடையே சமாதானம் பேசி அனுப்பி வைத்தது தெரியவந்தது. எனவே, இந்த முன்விரோத தகராறில் சவுந்தரராஜன் வெட்டிக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.  

தப்பியோடிய 4 பேரை பிடிக்க இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பூக்கடை பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பூக்கடை பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : DMK ,Pookadai , DMK leader fired at Pookadai bus stand: accident while setting up a water tank; Web for the mysterious gang who escaped on a bike
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...