×

தொடர்கிறது இலங்கை கடற்படை அட்டகாசம் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் படகுடன் சிறைபிடிப்பு: 10 நாளில் 35 பேர் கைதால் பதற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் 35 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால், கடந்த சில வாரங்களுக்கு முன், கடல் பகுதியில் அந்நாட்டு கடற்படையினரின் ரோந்து மந்தமாக இருந்தது. இதனால் தமிழக மீனவர்கள் பிரச்னையின்றி மீன் பிடித்து வந்தனர்.

இந்நிலையில் கடல் பகுதியில் மீண்டும் இலங்கை கடற்படையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை படகுடன் சிறைபிடித்தனர். கடந்த 30ம் தேதி ஜெகதாபட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் பாக் ஜலசந்தி கடலுக்கு சென்றனர்.

இரவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும், படகில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கை மயிலட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். நேற்று காலை கடற்படை உயர் அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர், யாழ்ப்பாணம் கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். 12 பேரையும் ஊர்காவல் துறை நீதிபதி சரோஜினி இளங்கோவன் உத்தரவின்படி, வரும் 18ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கடந்த 10 நாட்களில் தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 5 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் சிறைபிடிப்பு நடவடிக்கைகளால், ராமேஸ்வரம் பகுதி மீனவ குடும்பங்களிடையே பதற்றம் நிலவுகிறது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Sri Lanka Navy ,Rameswaram , Sri Lanka Navy continues to capture 12 Rameswaram fishermen with boat: 35 arrested in 10 days
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்