×

பாஜ.வுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி காங்கிரஸ் இல்லாமல் சாத்தியம் இல்லை: சரத் பவார் திட்டவட்டம்

புனே: காங்கிரஸ் கட்சி இல்லாமல் தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளது. ஆனால் பல தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் இல்லாமல் தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என்று சில கட்சிகள் கூறி வருகின்றன. சரத் பவார் முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்தவர். அனுபவம் உள்ள பழுத்த அரசியல் தலைவர். எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அவரை தலைவராக நியமிக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், கோலாப்பூரில் சரத் பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ளது. அதேபோல் பல பிராந்தியங்களில் அந்தந்த பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனாலும் இந்திய அளவில் அறியப்பட்ட கட்சி காங்கிரஸ்தான். எனவே காங்கிரஸ் இல்லாமல் தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நான் தலைமை தாங்க வேண்டும் என்று சில அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்க மாட்டேன். காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தில் உண்மைகளை மறைத்துள்ளனர். இந்த படம் இனவெறியையும் விரோதத்தையும் தூண்டிவிடும். பிரதமராக வி.பி.சிங் இருந்த போதுதான் காஷ்மீரில் இருந்து மக்கள் வெளியேறினர். அப்போது பாரதிய ஜனதா ஆதரவில் உள்துறை அமைச்சராக இருந்தவர் முப்தி முகமது சையத். காஷ்மீர் சம்பவங்களை விட குஜராத் சம்பவங்கள் மோசமானவை. பலர் உயிர் இழந்துள்ளனர். ஆனால், அப்போது ஆட்சி தலைவராக இருந்தவர் (முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி) முன்வந்து விளக்கம் எதுவும் தரவில்லை.இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

Tags : Paja ,Congress ,Sarat Bawar , National alliance against BJP is not possible without Congress: Sarabjit Pawar
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...