
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் காமெடி நடிகர் ஜிம் கேரி சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். ‘தி மாஸ்க்’, ‘ப்ரூஸ் தி அல்மைட்டி’, ‘பேட்மேன் ஃபார் எவர்’, ‘கிக்-ஆஸ் 2’, ‘லயர் லயர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ள அவர், 1983ல் வெளியான ‘தி செக்ஸ் அன்ட் வயலென்ஸ் பேமிலி ஹவர்’ என்ற படத்தில் அறிமுகமானார். 1994ல் வெளியான ‘ஏஸ் வென்ச்சுரா: பெட் டிடெக்டிவ்’, ‘தி மாஸ்க்’, ‘டம்ப் அன்ட் டம்பர்’ போன்ற படங்கள் ஹிட்டானது. ‘தி மாஸ்க்’ படம் அவருக்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில், ஜிம் கேரியின் வாழ்க்கையில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
60 வயது நிரம்பிய அவர், திடீரென்று சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ல் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம், ‘சோனிக் ஹெட்ஜ்ஹாக்’. தற்போது இதன் 2ம் பாகம் ‘சோனிக் ஹெட்ஜ்ஹாக் 2’ என்ற பெயரில் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படம் தனது கடைசி படம் என்றும், நிறைய படங்களில் நடித்துவிட்டதால் இனி ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்றும் ஜிம் கேரி தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ் சினிமாவில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.