×

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் வீரர் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 32 பந்தில் 60 ரன் விளாசினார். பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் மயாங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர். மயாங்க் 4 ரன் மட்டுமே எடுத்து முகேஷ் பந்துவீச்சில் உத்தப்பா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பானுகா ராஜபக்ச 9 ரன் எடுத்து ரன் அவுட்டாக, பஞ்சாப் 14 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், தவான் - லிவிங்ஸ்டன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 95 ரன் சேர்த்தது. குறிப்பாக, பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு சென்னை பந்துவீச்சை சிதறடித்த லிவிங்ஸ்டன் 27 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். தவான் 33 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிராவோ வேகத்தில் ஜடேஜா வசம் பிடிபட்டார். லிவிங்ஸ்டன் 60 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜிதேஷ் ஷர்மா 26 ரன் எடுத்து (17 பந்து, 3 சிக்சர்) பிரிடோரியஸ் பந்துவீச்சில் உத்தப்பாவிடம் பிடிபட, பஞ்சாப் ஸ்கோர் வேகம் சற்று மட்டுப்பட்டது. ஷாருக் கான் 11 பந்தில் 6 ரன், ஓடியன் ஸ்மித் 7 பந்தில் 3 ரன் எடுத்து ஜார்டன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராகுல் சஹார் 12 ரன்னில் வெளியேறினார். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. காகிசோ ரபாடா 12 ரன், வைபவ் அரோரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் கிறிஸ் ஜார்டன், டுவைன் பிரிடோரியஸ் தலா 2, முகேஷ், பிராவோ, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது.


Tags : Livingston ,Chennai Super Kings , Livingston action fifty against Chennai Super Kings
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...