×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சீர்திருத்த நடவடிக்கை துவக்கம்: அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் திருக்கோயில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின்படி திரிசுதந்திரர்களை முறைப்படுத்துதல் மற்றும் தரிசன வரிசைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதங்கள் மூலம் கோயில் இணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், திருக்கோயிலில் கடந்த மார்ச் 26ம் தேதி கூடுதல் ஆணையரால் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, திருக்கோயில் நலன் மற்றும் பக்தர்கள் நலன் கருதி ஏற்கனவே செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன. திருக்கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்ற விளம்பர பலகை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வைக்கவும், திருக்கோயிலில் உள்ள திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவினையும், ஆணையர் உத்தரவினையும் முழுமையாக செயல்படுத்தவும், திருக்கோயிலுக்குள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வரிசைமுறை நீங்கலாக தேவையில்லாத இடங்களில் உள்ள மற்ற வரிசை முறை அமைப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தேவர் குடிலுக்கு அருகிலும் மற்றும் ரூ.100 டிக்கெட் கவுண்டருக்கு அருகிலும் மொபைல் டாய்லெட்கள் அமைக்க ஆகம விதிகளுக்குட்பட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். திருக்கோயிலில் அபிஷேகத்தின் போது வெளியிலிருந்து பிளாஸ்டிக் கேன் மூலம் பல லிட்டர் பால் தினமும் கட்டணம் ஏதுமின்றி அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களிடம் பால்அபிஷேகம் செய்வதாக திரிசுதந்திரர்கள் தாங்களாகவே பிளாஸ்டிக் கேன்களில் கொள்முதல் செய்து சன்னதிக்குள் கொண்டுவந்து பூஜை செய்யும் போத்தி மூலம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

சுவாமியின் பீடத்தின் அருகிலேயே பால் கேன்களில் பிடித்து அபிஷேக பிரசாதமாக திரிசுதந்திரர்களிடம் திரும்ப வழங்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதால், இதனை பிற திருக்கோயில்களில் உள்ளவாறு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்ய வேண்டுமெனில் அதற்குரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து திருக்கோயில் திட்டப்படி ஒரு அபிஷேகத்திற்கு 50 லிட்டர் பசும் பாலை திருக்கோயில் மூலமே கொள்முதல் செய்து அபிஷேகம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முடிகாணிக்கை மண்டபத்தில் “முடிகாணிக்கை செய்ய கட்டணம் கிடையாது” என்ற வாசகம் பொருந்திய டிஜிட்டல் போர்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும்.

மேலும் முடிகாணிக்கை மண்டபத்தில் பணியிலிருக்கும் பணியாளர்கள் இலவச கட்டணச்சீட்டு வழங்கும் போதே “முடிகாணிக்கை செய்ய கட்டணம் இல்லை“ என்று தெரிவிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிக்க வேண்டும். முடிகாணிக்கையின் போது பணியாளர்கள் பக்தர்களிடம் தொகை பெறுவதை கண்காணித்து தொகை பெறும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு ரூ.1 கட்டணச்சீட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கட்டணச்சீட்டை ரத்து செய்து பக்தர்களை இலவசமாக அனுமதிக்க ஆணையர் அனுமதி பெற்று செயல்பட வேண்டும். பக்தர்கள் நீராடி விட்டு விரைந்து செல்வதற்கு பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். நீராடி விட்டு வரும் பெண்கள் உடை மாற்றுவதற்காக உள்ள அறையில் கூடுதல் எல்இடி டியூப் லைட்கள் பொருத்த வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறையின் முகப்பில் மறைப்பு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruchendur Murugan Temple ,Commissioner of Charities , Inauguration of renovation work at Thiruchendur Murugan Temple: The action of the Commissioner of Charities
× RELATED தமிழ்நாடு அரசின் அறுபடை வீடு ஆன்மிக...