மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் கழிவு கண்டுபிடிப்பு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்ய முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மனித உடலிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உணவு, தண்ணீர், காற்று ஆகியவற்றில் பிளாஸ்டிக் மென்துகள்கள் கலந்திருப்பதாகவும், நாம் சுவாசிக்கும் போதும், உணவுகளை உட்கொள்ளும் போதும் நமது உடலுக்குள் சென்று உறுப்புகளின் மீது படிவதாகவும், பின்னர் ரத்தத்தில் கலப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவை அச்சமூட்டும் தகவல்கள் ஆகும்.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 77 விழுக்காட்டினரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது கவலைக்குரியது. சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகம் இல்லாத ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருந்தால், பிளாஸ்டிக் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும்  இந்தியா போன்ற நாடுகளின் நிலைமையை நினைக்கவே அச்சமாக உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தினால் தான் நமக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறையினரையாவது காப்பாற்ற முடியும். பிளாஸ்டிக் கழிவு உலகத் தீமையாக மாறி வரும் நிலையில், அதை அனைத்து நாடுகளும் இனைந்து அகற்ற வேண்டும்.

அதற்கான பிளாஸ்டிக் ஒப்பந்தம் 2024 ல்உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்கும் வகையில் ருவாண்டா - பெரு நாடுகள் உருவாக்கிய வரைவு ஒப்பந்தம் முழுமையாக இருப்பதால் அதை இந்தியா ஆதரிக்க வேண்டும். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மட்டுமின்றி அனைத்து வகையான பிளாஸ்டிக்குகளையும் அரசு தடை செய்ய வேண்டும்.

Related Stories: