×

சென்னையில் 6ம் தேதி ஓட்டல் உரிமையாளர்கள் முக்கிய ஆலோசனை: காஸ், எண்ணெய், பருப்பு, அரிசி விலை உயர்வு எதிரொலி; உணவு பொருட்களின் விலை 10% வரை உயரும் ஆபத்து

சென்னை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் உணவு பண்டங்களின் விலையையும் 10 முதல் சதவீதம் வரை உயர்த்த ஓட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.268.50 அதிகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒரு சிலிண்டர் விலை ரூ.2,137லிருந்து ரூ.2,406 விலை உயர்ந்தது. இது உணவகங்கள் நடத்தி வருபவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பால், காஸ் விலை உள்ளிட்ட காரணங்களுக்காக டீக்கடை நடத்துபவர்கள் டீ விலையை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தினர். பார்சல் டீ ரூ.25ல் இருந்து ரூ.30, பார்சல் காபி ரூ.35லிருந்து ரூ.40 ஆகவும் விலை உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் காஸ் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஓட்டல்களின் உணவு பொருட்களின் விலையையும் உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் 10 சதவீதம் ஓட்டல் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது.

இது குறித்து சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது: சென்னையில் மட்டும் சிறியது மற்றும் பெரியது என சுமார் 16 ஆயிரம் ஓட்டல்கள் இயங்கி வருகிறது. உணவு பொருட்களை பொறுத்தவரை சிறிய ஓட்டல்களில் விலை குறைவாகவும், நடுத்தர கடைகளில் அதற்கு ஏற்பவும், உயர்தர ஓட்டல்களில் அதற்கு ஏற்பவும்  விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உணவு பொருட்கள் விற்பனை நடக்கிறது. தற்போது காஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது உணவக தொழிலை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் கடந்த ஆண்டு ரூ.1200 சிலிண்டர் விலை இருந்தது.

இது ஒரே ஆண்டில் ரூ.2400 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.120 ஆக இருந்தது. இப்போது ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. அரிசி, பருப்பு போன்ற மூலப் பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்து விட்டது. இதனால் உணவு பண்டங்கள் தயாரிக்க செலவினம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு பண்டங்கள் ரூ.100க்கு தயாரித்தால் அதில் சமையல் எரிவாயுக்காக 16 சதவீதம் வரை செலவு ஆகிறது. அது மட்டுமல்லாமல் கட்டிடம் வாடகை, ஊழியர்கள் சம்பளம் என்று செலவு வேறு. இந்த செலவினங்களை ஈடுகட்ட உணவு பண்டங்களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.

இது தொடர்பாக கலந்து பேசி முடிவெடுக்க வருகிற 6, 7ம் தேதிவாக்கில் ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டம் நடத்த திட்டடமிட்டுள்ளோம். அன்றைய தினத்தில் விலை உயர்வு முடிவு குறித்து பேசி முக்கிய முடிவை அறிவிப்போம். குறைந்த பட்சம் உணவு பொருட்கள் விலை 10%வரை உயர்த்தப்படும். 2 இட்லி ரூ.20க்கு விற்கப்பட்டால் அது ரூ.22 ஆக விலை உயரும். மேலும் கடைக்கு ஏற்ப இட்லி, தோசை, பொங்கல், பூரி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்த்தப்படும். விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு உணவகங்ளுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்க வேண்டும். அப்படியானால் தான் விலை ஏற்றம் என்பதை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai , Hotel owners' key advice on the 6th in Chennai: Echo of rising gas, oil, pulses and rice prices; Risk of rising food prices by up to 10%
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...