மாமல்லபுரம் புலிக்குகை பகுதியில் தொல்லியல் துறை விதிமீறல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதியில் தொல்லியல் துறை விதிகளை மீறி பொக்லைன் இயந்திரத்தை வைத்து பணிகளை செய்து வருகிறது.மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி சாலவான்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, புலிக்குகை என்னும் புராதன சின்னம் உள்ளது. பல்லவர்களால், பாறையை குடைந்து செதுக்கப்பட்ட ஒரு முக்கிய புராதன சின்னமாக இன்றளவும் கருதப்படுகிறது. இங்குள்ள ஒரு பாறையில் புலிகளின் தலைகளை சிற்பங்களாக பல்லவர்கள் செதுக்கியுள்ளனர். இதனை காண, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையில், இந்த புலிக்குகை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அப்பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் வீடு கட்டுவதற்கு, ஆழ்துளை மற்றும் அதிர்வலைகள் ஏற்படுத்தும் கட்டுமான பணிகளுக்கு அனுமதி இல்லை. அதேப்போல், பொக்லைன் இயந்திரம் மூலம் எந்த ஒரு பணியும் செய்யக் கூடாது என விதிமுறைகளை விதித்துள்ளது.இந்நிலையில், புலிக்குகை பகுதியில் தொல்லியல் துறை நிர்வாகம் சார்பில், சுற்றுலா பயணிகளுக்காக நடைபாதை, கருங்கல் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. 100 மீட்டருக்குள் எந்த பணி செய்தாலும் கை, மண் வெட்டி மூலமே பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை மீறி, புராதன சின்னங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டிய தொல்லியல் துறை நிர்வாகமே பொக்லைன் மூலம் பணிகள் மேற்கொள்வதை கண்டு சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: