கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 8 பேர் காயம்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை நோக்கி பேருந்து, கன்டெய்னர் லாரி மற்றும் கார் என ஏராளமான வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. அப்போது, கடலூரில்  இருந்து மீன் ஏற்றுவதற்காக காசிமேடு பகுதியை நோக்கி கன்டெய்னர் லாரி வந்தது. இதை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல்(31) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது,   திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள்  சென்றுகொண்டிருந்த மற்றொரு லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. இதையடுத்து, அந்த லாரி நிலைதடுமாறி முன்னாடி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதனால்,  அடுத்தடுத்து, கன்டெய்னர் லாரி, பேருந்து, லாரி என  வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.

இதில் அதிர்ச்சியடைந்த மணிவேல் இடதுபக்கமாக கன்டெய்னர் லாரியை திருப்பினார். அப்போது அவ்வழியாக சென்ற சொகுசு கார் மீது வேகமாக மோதியது. இதில், கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. மேலும், மற்ற லாரி, பஸ், கார்களும் சேதமடைந்தன. இதில், லாரி மற்றும் பேருந்து  ஓட்டுனர்கள், காரில் பயணம் செய்த 4 பேர் உட்பட 8 பேர் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி ஓட்டுனர் மணிவேலை கைது செய்தனர். விசாரணையில், கன்டெய்னர் லாரியில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Related Stories: