ஏஇசிடிஇ விதிகளின்படி 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் புதிய படிப்பு துவங்க அனுமதியில்லை

சென்னை: பொறியியல்  கல்லூரிகளின் தரம், மாணவர் சேர்க்கை,  உள்கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 2022-23ம் கல்வியாண்டுக்கான  ஒப்புதல் செயல்முறை கையேட்டை அகில  இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு 50 சதவீதத்திற்கும் அதிகமான மொத்த  மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே புதிய படிப்புகள் தொடங்க அனுமதிக்கப்படும்  என்று  கூறப்பட்டுள்ளது.அதன்படி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் நிர்ணயித்துள்ள ஒட்டுமொத்த 50% சேர்க்கை விதியின்படி, தமிழ்நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் 2022-23ம் ஆண்டிற்கான புதிய படிப்புகள் துவங்குவதற்கான தகுதியை இழந்துள்ளன. கடந்த 2021-22ம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த போதிலும், தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் 200 கல்லூரிகளில் மட்டுமே 50%க்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நிரப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாரம்பரிய பிரிவுகளை மட்டும் கொண்டு செயல்படுவதால் அக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, தரவு அறிவியல், இயந்திர கற்றல் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்திய ஏஇசிடிஇ, ஒட்டுமொத்தமாக 50% மாணவர் சேர்க்கை உள்ள  கல்லூரிகள் மட்டுமே புதிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையது என்ற  விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்காரணமாக 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 2022-23 கல்வி ஆண்டில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஏஇசிடிஇயின் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட விதிகள், பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த வழிவகை செய்யும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். புதிய பாடப்பிரிவுகளை தொடங்கும் முன் கல்லூரிகள் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தரம் மற்றும் மாணவர் சேர்க்கையை மேம்படுத்தும் விதமாக இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: