×

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த நடிகரும், பாஜ பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது 2018ம் ஆண்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தனக்கு எதிராக உள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி தரப்பில், முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பியிருந்ததும், சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக் கொள்கிறார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.அதன்படி, நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி.சேகர் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் தனது வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவனுடன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணைக்குப் பின் வெளியே வந்த நடிகர் எஸ்.வி.சேகரின் வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன் கூறும்போது, இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை காவல்துறை முன்பு ஆஜராகி அளித்துள்ளோம். இனி இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.மேலும், எஸ்.வி.சேகரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது “நான் இன்று மவுனவிரதம்” என அவரே கூறிக்கொண்டு காரில் ஏறி சென்றார்.





Tags : SV Sehgar Azhar ,Commissioner of Police , In the case of slander against female journalists In the office of the Commissioner of Police Actor SV Sehgar Azhar
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...