கோவை அருகே பரபரப்பு நீட் பயிற்சி மைய விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை: மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்

கோவை: கோவை அருகே நீட் பயிற்சி மையத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை ஆர்.எஸ்.புரம் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஸ்வேதா (19). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்விற்கான பயிற்சியை பெற்று வந்தார். அதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இவர் படித்து வந்த பயிற்சி மையத்தில் மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நீட் தேர்விற்கான பயிற்சி பெற்று வந்தார். அப்போது வாலிபருக்கும், ஸ்வேதாவிற்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இது இரு தரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் ஏற்கவில்லை. வாலிபரை அவரது பெற்றோர் மதுரைக்கு அழைத்து சென்று விட்டனர். இதனால், ஸ்வேதா மன விரக்தியில் காணப்பட்டார். நேற்று முன்தினம் இவர் உடல் நிலை சரியில்லை எனக்கூறி பயிற்சி மையத்திற்கு செல்லாமல் விடுதி அறையில் இருந்தார். சிறிது நேரத்தில் ஸ்வேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  காதல் தோல்வியடைந்துவிடும் என்ற பயத்தில் ஸ்வேதா தற்கொலை செய்துகொண்டதாக கூறுப்படுகிறது. இது தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஸ்வேதாவின் பெற்றோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். இந்த மனுவில், ‘‘ஸ்வேதா தற்கொலை செய்ததாக கூறியது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. புலனாய்வு செய்யாமல் தூக்கில் தற்கொலை செய்தார் என தெரிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஸ்வேதா இறந்த அறை சுத்தம் செய்யப்பட்டது எதற்காக? இதுவரை என் மகள் பழகியதாக கூறப்பட்ட வாலிபரிடமும், அகாடமி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தவில்லை. போலீசாருக்கு 5 மணி நேரம் தாமதமாக தகவல் தெரிவித்தது ஏன்? இந்த இறப்பை வன் கொடுமை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரிக்கவேண்டும். அகாடமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: