×

ஆஸ்கர் விருது அமைப்பிலிருந்து வில் ஸ்மித் பதவி விலகல்: ‘பளார்’ விவகாரத்தால் திடீர் முடிவு

வாஷிங்டன்: ஆஸ்கர் விருது அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். சக நடிகரை அறைந்த விவகாரத்தை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற படத்துக்காக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக், மேடையில் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி மற்றும் உடல்நிலை குறித்து கிண்டலடித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். யாரும் எதிர்பார்க்காத இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும், தனது செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக ஆஸ்கர் அகாடமி அளித்த விளக்கத்தில், ‘தொடர்ந்து அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால், வில் ஸ்மித்மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்’ என்றும் கூறியிருந்தது.இந்நிலையில், தற்போது மேற்கண்ட ஆஸ்கர் விருதை நடத்தும் அமைப்பின் பதவியை திடீரென்று வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவிருந்த நிலையில், தற்போது வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  
இந்நிலையில், அவரது ராஜினாமாவை ஆஸ்கர் அகாடமி ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Will Smith ,Oscar , From the Oscar system Will Smith's resignation: Sudden end due to 'Blar' affair
× RELATED ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது