×

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு இம்ரான் கானுக்கு ‘3 சாய்ஸ்’: பாகிஸ்தான் ராணுவம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், தன்னிடம்  மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இதில், பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான் கான் அரசு கவிழும்.இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் எம்கியூஎம். கட்சி ஏற்கனவே விலக்கிக் கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்து விட்டது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சி கூட்டணியின் பலம் 179-ல் இருந்து 164 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது. இதனால், இம்ரான் கான் வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவி விலகி விடுவார் என கருதப்பட்ட நிலையில், ‘கடைசி பந்து வரை நின்று ஆடுவேன்’ என்று அவர் கூறிவிட்டார். இந்நிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றி இம்ரான் கான், ‘ராணுவம் எனக்கு மூன்று வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம், விரைவில் தேர்தல், பதவியிலிருந்து ராஜினாமா ஆகிய வாய்ப்புகள் என் முன்பாக இருக்கின்றன. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அன்னிய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளும் என்னை கொலை செய்ய முயல்கின்றன. என்னை மட்டுமல்லாமல் என் மனைவியையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும் கூட, கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்த கட்சிகளுடன் இணைந்து இனிமேல் என்னால் பணியாற்ற முடியாது. இதற்கு, நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தான் சிறந்த வழி. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சதி இருக்கிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே இது பற்றி எனக்கு தெரியும். சில எதிர்க்கட்சி தலைவர்கள் தூதரகங்களுக்கு சென்று வந்ததாக தகவல் வந்தது. ஹுசைன் ஹக்கானி போன்ற தலைவர்கள் லண்டனில் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினர்,’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவுடன் சமரசம் பாக். தளபதி விருப்பம்
இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் பாஜ்வா பேசுகையில், ‘‘காஷ்மீர் உள்பட இந்தியா உடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதில் முன்னேற்றம் காண இந்தியா விரும்பினால் நாங்களும் தயார். அதே போல்், அமெரிக்கா- பாக். இடையே நீண்ட காலமாக சிறப்பான  உறவு உள்ளது. ஆனால், கோஷ்டி அரசியல் செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை,’  என்று தெரிவித்தார்.

வீதிக்கு வந்து போராட அழைப்பு
தொலைக்காட்சியில் பேசிய இம்ரான் கான், ‘என் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து  பாகிஸ்தான் மக்கள் இன்றும், நாளையும் வீதிக்கு வந்து போராட வேண்டும். இது போன்ற சம்பவம் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், இந்நேரம் மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்கி இருப்பார்கள். இந்த தேசத்தின் நலனுக்காகவும், உங்கள் மனசாட்சிக்காகவும் நீங்கள் இதை செய்ய வேண்டும். வெளிநாட்டு சக்திகளின் சதிக்கு எதிராக பாகிஸ்தான் வாலிபர்கள் குரல் எழுப்ப வேண்டும்,’ என அழைப்பு விடுத்தார்.


Tags : Imran Khan ,Pakistan Army , Vote today on the no-confidence motion ‘3 Choice’ for Imran Khan: Pakistan Army Action
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு