×

ஏற்றுமதி செய்யப்படும் 6 ஆயிரம் இந்திய பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் சுங்க வரி ரத்து: இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 6 ஆயிரம் பொருட்கள் மீதான வரியை நீக்கும் வகையில், இந்தியா, ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய தயாரிப்பு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையில்லா ஏற்றுமதிக்கான புதிய ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.காணொலி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் முன்னிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலும், ஆஸ்திரேலிய வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டு அமைச்சர் டான் டெஹானும்  கையெழுத்திட்டனர். தற்போது, ஆஸ்திரேலியா சுமார் 6,500 இந்திய பொருட்களுக்கு சுங்க வரி விதித்து வருகிறது.

அதில் 96.4 சதவீத பொருட்களுக்கான வரி இனி நீக்கப்படும். இது குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘‘இந்த ஒப்பந்தம், இருதரப்பு வர்த்தகத்தை ரூ.2.06 லட்சம் கோடி என்பதில் இருந்து, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடியாக உயர்த்த உதவும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சூழலும் உருவாகும்,’’ என்றார்.இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜவுளி மற்றும் ஆடைகள், விவசாய மற்றும் மீன் பொருட்கள், தோல்,  விளையாட்டு பொருட்கள், நகைகள், மின்சார பொருட்கள் ஆகியவை மிகவும் ஆதாயமடையும் துறைகளாக இருக்கும்.

பரஸ்பர நம்பிக்கை
புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கடந்த 10 ஆண்டு கால உறவில் இந்த முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையைக் காட்டுகிறது,’’ என்றார்.



Tags : Australia , Will be exported For 6 thousand Indian goods Australia abolishes tariffs: Bilateral trade agreement signed
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை