×

இந்தியா - ஆஸ்திரேலியா ஒப்பந்தம்!: அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு ..ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை..!!

டெல்லி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலியா வர்த்தகத்துறை அமைச்சர் டான் டெஹான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் பியூஷ் கோயல், இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை, தற்போதுள்ள 2,700 கோடி அமெரிக்க டாலரில் இருந்து கிட்டத்தட்ட 45 முதல் 50 கோடி அமெரிக்க டாலராக மாற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகுமென நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கல்வி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், இந்திய சமையல் கலைஞர்கள் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர்களுக்கு வரும் காலத்தில் பல புதிய வாய்ப்புகள் ஏற்படும் எனவும் கூறினார்.

வர்த்தகரீதியான தடைகள் களையப்பட்டுவிட்டதால், தொழிலாளர் சார்ந்த துறைகளான ஜவுளித்துறை, மருந்துத்துறை, தோல்பொருட்கள் செய்தல், பொறியியல் சாதனங்கள், ஆட்டோமொபைல் ஆகியவற்றில் அதிகமான வேலைவாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து  பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,  இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பரஸ்பர நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதைக் காட்டும் இந்த ஒப்பந்தம், மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால், இருநாடுகளுக்கும் இடையேயான  வர்த்தகம் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் விநியோக சங்கிலி பின்னடைவை வலுப்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையே மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் என்று கூறினார். இந்தியா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் இருந்தாலும் ஆஸ்திரேலியா சீனாவுக்கு மறைமுகமாகச் செக் வைத்துள்ளது.

Tags : India ,Australia ,Union Minister ,Byush Goel , India - Australia Agreement, Employment, Piyush Goyal
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!