×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில்சிலை மாயமான விவகாரம்!: உண்மை கண்டறியும் குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில்சிலை மாயமானது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.வேங்கடராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்ததற்கான அரசாணை வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றபோது புண்ணேவனநாதர் சன்னதியில் இருந்த மயில்சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரியும், அறநிலையத்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்தும் விசாரணையை விரைந்து முடிக்கக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிலை மாயமானது குறித்து விசாரிக்கும் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையையும் 6 வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டது. மாயமான சிலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிலை கிடைக்காவிட்டால் 4 மாத காலத்திற்குள் புதிய சிலை அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதனைத் தொடர்ந்து, மாயமான சிலை தொடர்பாக புலன் விசாரணையையும், உண்மை கண்டறியும் விசாரணையையும் விரைந்து முடிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே வேங்கடராமன் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவுக்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags : Mylapore ,Kabaliswarar ,Government of Tamil Nadu , Mylapore Kabaliswarar Temple, Peacock, Group, Government of Tamil Nadu
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...