×

கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் போராட்டத்தில் குதித்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள்!: 120 விமானங்கள் ரத்து..பயணிகள் தவிப்பு..!!

வாஷிங்டன்: கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தங்களது பணி ஒப்பந்தங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவன  விமானிகள் கடந்த 3 ஆண்டாக வலியுறுத்தி வரும் நிலையில், விமான நிறுவனம் அதனை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வலியறுத்தி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விமான நிலைய வாயில்களில் வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானிகளின் அறிவிக்கப்படாத போராட்டத்தால் அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டது. 120க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக சியாட்டில், போர்ட்லாண்ட், ஓரிகான், லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

விமானிகளின் போராட்டத்தை அடுத்து அவர்களது கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விமானி ஒருவர் கூறுகையில், இது ஒரு அடையாள போராட்டம் மட்டுமே. இந்த போராட்டத்தின் மூலம் எங்கள் நிர்வாகத்திற்கு புதிய ஒப்பந்தத்திற்கான நேரம் இது என்ற வலுவான செய்தியை அனுப்ப நாங்கள் ஒன்று கூடியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.


Tags : Alaska Airlines ,US , USA, Alaska Airlines pilots, struggle
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்