×

பொருளாதார சீர்குலைவு, விலைவாசி உயர்வு இலங்கை மக்கள் கோபம் வன்முறையாக மாறுகிறது: போர்களமானது அதிபர் மாளிகை பகுதி

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அவர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டனர்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மருந்து, உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத காரணத்தால் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு முழுவதும் தெரு விளக்குகளும் அணைக்கப்படுகின்றன.
இதனால் ஆத்திரமடைந்து உள்ள மக்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு, அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். இதில் வன்முறை வெடித்தது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர், வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி, போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இதனால், அதிபர் மாளிகை பகுதி முழுவதும் போர்களமாக காட்சி அளித்தது. இந்த வன்முறை தொடர்பாக நேற்று 54 பேர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். வன்முறை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் கொழும்பு-கண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் போராட்டம் வன்முறையாக மாறி வருவதால், இலங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தீவிரவாத செயல்
இலங்கை போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம நேற்று அளித்த பேட்டியில், ‘அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியது தீவிரவாத செயலாகும். கூட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளே இந்த வன்முறைக்கு காரணம்,’ என்று குற்றம்சாட்டினார்.

Tags : Presidential Palace , Economic downturn, rising prices Sri Lankan people angry Turns violent: The battlefield is part of the Chancellery
× RELATED ஜனாதிபதி மாளிகை பூங்கா மீண்டும் திறப்பு