ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு சொகுசு காரில் கடத்திய 33 கிலோ கஞ்சா பறிமுதல்: எஸ்பி வருண்குமார் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், கவரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் உள்ளிட்ட போலீசார் ேநற்று முன்தினம் சத்தியவேடு சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, பஞ்செட்டி, தச்சூர் கூட்டு சாலை, பன்பாக்கம், குருராஜா கண்டிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது,  சத்தியவேடுலிருந்து கவரப்பேட்டை வழியாக சொகுசு கார் வேகமாக சென்றது. போலீசார் காரை நிறுத்த முயற்சி செய்தனர்.  ஆனால், அந்த கார் நிற்காமல் கீழ்முதலம்பேடு வரை வேகமாக சென்றது.  இதையடுத்து, காரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் புதுவாயல் திருப்பு முனையில் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர்,  காரில் இருந்த 2 வாலிபர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது, 33 கிலோ கஞ்சா அவர்களிடம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது  செய்தனர்.விசாரணையில், கேரளாவை சேர்ந்த நௌபால்(29), சுல்பிகர்(32) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை விஜயவாடாவில் இருந்து சென்னை வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. தகவலறிந்த மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார், டிஎஸ்பி ரித்து ஆகியோர் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

காவலர்களுக்கு வாழ்த்து

மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் கூறுகையில்,  `தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற முன்னெடுப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  குற்றவாளிகளை பிடிக்கும் பட்சத்தில் குண்டர் சட்டத்தில் அடைத்து வருகிறோம்.  அதன் முன்னோட்டமாக தான் தற்போது இந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. அத்தோடு, கஞ்சாவை பிடித்த காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்’ என பேசினார்.

Related Stories: