×

டெல்லியில் உள்ள அரசு மாடர்ன் பள்ளி போன்று தமிழ்நாட்டிலும் விரைவில் அரசு மாடர்ன் பள்ளி திறக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், கல்வி அதிகாரிகளுடன் டெல்லியில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார். டெல்லி அரசு பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 13 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதற்காக 2021-22ம் ஆண்டில் டெல்லி அரசால் ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு, அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர், பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, பாராட்டினார்.

மேலும், அந்த பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்களுடன் உரையாடினார். டெல்லி அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட பின்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மாடர்ன் பள்ளியை உருவாக்கி, அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை கேள்விப்பட்டேன். அதனால், டெல்லிக்கு வந்த நான் அந்த பள்ளியை பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டபோது, நிச்சயமாக நீங்கள் வருகிறபோது நானே வரவேற்று அதை அழைத்துச் சென்று காண்பிக்கிறேன் என்று டெல்லி முதல்வர் சொல்லி, என்னை இங்கு அவரே அழைத்து வந்திருக்கிறார்.  அதற்காக முதலில் அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய அரசு, எல்லா துறைகளுக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறதோ, அதைவிட அதிகமான அளவிற்கு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவத்தை நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இந்த மாடர்ன் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோன்ற பள்ளிகளை தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணிகள் முடிவுற்று அந்த பள்ளியை நாங்கள் திறக்கிற நேரத்தில், நிச்சயமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை நாங்கள் அழைக்க இருக்கிறோம். அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உங்கள் மூலமாக நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மொஹலா கிளினிக்கை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 500 மொஹலா கிளினிக்குகள் உள்ளதாகவும், அதனை 1000ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இக்கிளினிக்குகளை டெல்லி மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளதாகவும், மகளிருக்கான தனி மொஹலா கிளினிக்குகளை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வுகளின்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை  முதல்வர் மனிஷ் சிசோதியா, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பாலு எம்பி, தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, டெல்லி அரசு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர்  ராஜேஷ் பிரசாத், பள்ளி கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் இரா.சுதன், இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) சினேகா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Government Modern School ,Tamil Nadu ,Delhi ,Chief Minister ,MK Stalin , Government Modern School to be opened in Tamil Nadu soon like Government Modern School in Delhi: Chief Minister MK Stalin's announcement
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்